காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - நிதி ஒதுக்க கோரிக்கை
நிதி ஒதுக்க கோரி காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்காக கடந்த 10 மாதங்களாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் செய்ய முடியாமல் அவரவர் சொந்த பணத்தில் செலவு செய்து வருவதாக தெரிகிறது.
இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கக்கோரியும் நேற்று காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டமைப்பு தலைவர் சுதா மணிரத்தினம் தலைமையில் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். ஊராட்சிகளுக்கு பணிகளை ஒதுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உங்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து அவரிடம் கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர்கள் அளித்தனர். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Related Tags :
Next Story