வடமதுரை மாணவி கொலை வழக்கில் நீதி கேட்டு 2 ஆயிரத்து 500 சலூன்கடைகள் அடைப்பு-ஆர்ப்பாட்டம்


வடமதுரை மாணவி கொலை வழக்கில் நீதி கேட்டு 2 ஆயிரத்து 500 சலூன்கடைகள் அடைப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:45 PM GMT (Updated: 10 Oct 2020 4:15 AM GMT)

வடமதுரை மாணவி கொலை வழக்கில் நீதிகேட்டு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 சலூன் கடைகள் அடைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கை அரசு மேல்முறையீடு செய்யக்கோரி, கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான 12 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு வந்தாள். இந்தநிலையில் கடந்த 16.4.2019-ந்தேதியன்று அவளுடைய பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை அடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் மாணவி கொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் கொலை வழக்கு விசாரணையின் போது போலீசார் உரிய ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். கோர்ட்டு அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மாணவியின் கொலை வழக்கில் நீதி கேட்டு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் சலூன்கடைகள் அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மற்றும் அழகுநிலையங்கள் அடைக்கப்பட்டன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வடமதுரை, நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் ஒட்டன்சத்திரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் சலூன்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல் அழகுநிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில், நேற்று மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பொதுநலச்சங்கத்தினர் மாணவியின் கொலை வழக்கில் நீதி கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். அப்படியானால் மாணவியை பலாத்காரம் செய்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. எனவே, சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளி தப்பிவிடாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதற்காக மாணவி கொலை வழக்கில் அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும். மாணவியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவியின் கொலை வழக்கில் நீதிகேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவி கொலை வழக்கை அரசு மேல்முறையீடு செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அய்யலூர் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் அய்யலூர் ரெயில் நிலைய சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் அய்யலூரில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

கோபால்பட்டி மருத்துவ சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் துரைபாண்டியன், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுதவிர கோபால்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நிலக்கோட்டையில் மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு தாசில்தார் யூஜினிடம், இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

பழனியில், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி கிளை தலைவர் மணி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் காந்திதாசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story