மாணவி கொலை வழக்கை ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டி
மாணவி கொலை வழக்கை ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மாணவி கொலை வழக்கில் நீதிகேட்டு நேற்று சலூன்கடைகளை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது.
எனவே, மாணவியின் கொலை வழக்கை மேல்முறையீடு செய்யக்கோரி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் திரளாக வந்து திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். அதில், தனது குழந்தையை இழந்த பெற்றோர் நீதிகேட்டு போராடி வருகின்றனர். கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவது பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. பெண்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள் என்பதால் நீதி மறுக்கப்பட கூடாது. எனவே, மாணவியின் குடும்பத்துக்கு நீதிகிடைக்க, ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜோதிமணி எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், இந்த வழக்கை பொறுத்தவரை போலீசார் தவறு இழைத்துள்ளனர். எனவே, மாணவி கொலை வழக்கில் நீதி கிடைக்க அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், இதுவரை தனி நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. பெண்கள் விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. பொள்ளாச்சி சம்பவம் உள்பட பல பிரச்சினைகளில் நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.
இதற்கிடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமதுநவவி விடுத்துள்ள அறிக்கையில், மாணவி கொலை வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய போலீசார், ஆதாரங்களை கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே உண்மையான குற்றவாளியை கண்டறிந்து சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டியது போலீசாரின் பொறுப்பாகும். தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து குற்றவாளியை கண்டறிந்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணை நிற்கும், என்று கூறியிருக்கிறார்.
Related Tags :
Next Story