ஜோலார்பேட்டையில் சொந்த வீட்டுக்கு பரோலில் விடுதலையாகி வந்த பேரறிவாளன் - கண்ணீர் மல்க தாயார் அற்புதம்மாள் வரவேற்பு


ஜோலார்பேட்டையில் சொந்த வீட்டுக்கு பரோலில் விடுதலையாகி வந்த பேரறிவாளன் - கண்ணீர் மல்க தாயார் அற்புதம்மாள் வரவேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 10:45 PM GMT (Updated: 10 Oct 2020 4:25 AM GMT)

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளன் நேற்று 3-வது முறையாக பரோலில் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த காவலுடன் வந்தார். அப்போது அவரை தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார்.

ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே அவர் இரண்டு முறை பரோலில் வந்திருந்தார்.

இந்த நிலையில் 3-வது முறையாக பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் சிறைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று காலை 8 மணியளவில் சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்திய சிறைக்கு பலத்த காவலுடன் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து பலத்த காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் அழைத்து வரப்பட்டார்.

அப்பொழுது அவரது தாயார் அற்புதம்மாள் கிருமி நாசினியை கொடுத்தார். அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பேரறிவாளன் வீட்டுக்கு வெளியே வாளியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்நீர் கலந்த தண்ணீரில் முகத்தையும் சுத்தப்படுத்திக்கொண்டார். அப்போது அவரை தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார்.

கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் தாயாரை நிருபர்கள் சந்தித்தபோது கூறியதாவது:-

என்னுடைய பிள்ளைக்கு சிறுநீர் தொற்று நோய் இருப்பது உலகத்திற்கே தெரியும். தற்பொழுது கொரோனா நோய் தொற்று காலகட்டம் என்பதால் என் பிள்ளை தனக்கு பாதிக்கப்பட்ட வியாதிக்கு உரிய மருந்துகளை கடந்த 5, 6 மாத காலமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 30 ஆண்டுகாலம் இளமையை இழந்து வாழ்க்கையை தொலைத்து விட்ட என் பிள்ளையை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பரோல் கேட்டேன். காலதாமதமாக கிடைத்து இருந்தாலும் பரவாயில்லை வேறு என்ன செய்வது எங்களால் கேட்கத்தான் முடியும் என்று சட்டத்திற்கு முன்பு போராட முடியாத இயலாமையில் உள்ளேன். மேலும் என் பிள்ளையை முன்னாள் முதல்-அமைச்சர் கண்டிப்பாக விடுவிப்பேன் என்று உறுதியளித்திருந்தார். நான் மலைபோல் நம்பி இருந்தேன். அது நடக்கவில்லை. நடப்பது நடக்கட்டும். பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story