திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: வேலூர் மாவட்டத்தில் 900 சலூன் கடைகள் மூடல் - கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
திண்டுக்கல்லில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரி வேலூர் மாவட்டத்தில் 900 சலூன் கடைகள் மூடப்பட்டன.
வேலூர்,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த குறுவம்பட்டி கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட மருத்துவர் நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தசங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எம்.கணபதி, செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, அமைப்பாளர் சரவணன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் விஜி மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரியும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
நிர்வாகிகள் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட சலூன் கடைகளை அடைத்துள்ளோம் என்றனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி, வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story