பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு குமரியில் 5 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு - 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு குமரி மாவட்டத்தில் 5 ஆயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாகர்கோவில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்த நபரை கோர்ட்டு விடுதலை செய்தது. இந்த நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் 10-ந் தேதி ஒரு நாள் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் உள்பட பல்வேறு இடங்களில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் 2 இடங்களில் சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதாவது தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை மற்றும் தமிழ்நாடு அழகுகலை மற்றும் அமைப்புசாரா அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தலைவர் சிவபெருமாள், துணை தலைவர்கள் சுகுமாரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகராஜன், சுந்தர்ராஜன், சிவராஜ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தின் கீழ் உள்ள சுமார் 4 ஆயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் மட்டும் 700 கடைகள் மூடப்பட்டன“ என்றார்.
இதே போல குமரி மாவட்ட அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரமேஷ், இசக்கிராஜ், கருப்பசாமி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி மாவட்ட தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பில் உள்ள 1,300 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன“ என்றார்.
Related Tags :
Next Story