ஆற்காட்டில், திருட வந்த வீட்டில் நகை, பணம் இல்லாததால் தோசை சுட்டு சாப்பிட்டு சென்ற திருடர்கள்
ஆற்காட்டில் திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிட்டதுடன், தோசையும் சுட்டு சாப்பிட்டு சென்றுள்ளனர்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வினோத்குமார் தனது மனைவி ரேவதி மற்றும் குழந்தையுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் அவர்கள் வீடுதிரும்பினர்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திருட்டுபோகவில்லை.
திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் சமையலறைக்கு சென்று அங்கு சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். சாப்பாடு குறைவாக இருந்ததால், அங்கிருந்த மாவை எடுத்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வினோத்குமார் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story