மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய பாதுகாப்பு குழு: கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்
நெல்லை மாவட்டத்தில் மழைக்காலங்களில் பொது மக்களுக்கு உதவி செய்ய பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உயர்கல்வித்துறை செயலாளருமான அபூர்வா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் இடி-மின்னலின்போது, பொதுமக்கள் நல்ல கட்டிடங்களில் ஒதுங்க வேண்டும். திறந்தவெளியிலோ, மரங்களின் அடியிலோ ஒதுங்க கூடாது. இடி-மின்னல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், நெல்லை மாவட்டத்தில் முதல்நிலை மீட்பாளர்கள் 63 பேர் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று இரண்டாம் நிலை மீட்பாளர்கள் 200 நபர்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாம்பு பிடிக்க 30 பேரும், நீச்சல் மற்றும் மரம் ஏறுவதற்கு 300 பேரும், கால்நடைகளைப் பராமரிக்க 16 பேரும், தன்னார்வலர்கள் 50 பேரும், செஞ்சிலுவைச் சங்கத்தினர் 40 பேரும், சாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு 30 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் மழை அளவை கண்டறியும் கருவிகளைக் கொண்டு தொடர்ந்து தனியாக பணியாளர்களை நியமனம் செய்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு மற்றும் வெளியேறும் நீரின் அளவு குறித்து அறிவதற்கு தனியாக பொறியாளர்களை நியமனம் செய்து கண்காணிக்கப்பட்டு, உதவி கலெக்டர்களுக்கு உடனுக்குடன் தகவல் வழங்கப்படும்.
நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.990 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.14 கோடியே 67 லட்சம் மதிப்பில் கனரக வாகனங்கள் நிறுத்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
பசுமை நிறைந்த கண்கவர் அழகிய பூங்காக்கள் 20 இடங்களில் ரூ.14 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியில் பேட்டரியில் இயங்கும் 270 குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் ரூ.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
12 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் 23 மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டிடங்களும் ரூ.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் நவீன முறையில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க தக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஜெனரேட்டர், நடமாடும் மருத்துவ குழு உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படாமல் சரி செய்ய உள்ளாட்சித் துறையினர் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ரூ.78 கோடியே 51 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், மாநகராட்சிக்கு எதிராக ரூ.56 கோடியே 76 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக மையத்தையும் கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆய்வு செய்தார்.
பின்னர் மானூர் தாலுகா கூத்தவநேரி, சாலைப்புதூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளையும், பாளையங்கோட்டை தாலுகா நத்தம் திருமலை கொழுந்துபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஷில்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story