கர்நாடகத்தில் கொரோனா பாதித்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆன மருத்துவ செலவு ரூ.35.50 லட்சம்: கட்டண தொகையை அரசு செலுத்துகிறது
கர்நாடகத்தில் கொரோனா பாதித்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ செலவாக ரூ.35.50 லட்சம் ஆகி உள்ளது. இந்த மருத்துவ கட்டணத்தை அரசு செலுத்த உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதித்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ செலவாக ரூ.35.50 லட்சம் ஆகி உள்ளது. அந்த கட்டண தொகையை அரசு செலுத்த உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெலகாவி வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் பெனகேயும், அவரது குடும்பத்தினரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். அனில் பெனகே, அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவாக ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 856 ஆகி உள்ளது.
கொப்பல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகவேந்திர ஹித்னாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அவருக்கு ஆன மருத்துவ செலவு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 21 ஆகும்.
ராய்பாக் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. துரியோதன் ஐகோலுக்கு மருத்துவ செலவாக ரூ. 3 லட்சத்து 7 ஆயிரத்து 113-ம், இரியூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாசுக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 654-ம், பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஷ்வருக்கு ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 172-ம், நாகமங்களா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடாவுக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 279-ம் மருத்துவ செலவாகி உள்ளது.
இதுபோல சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடாவுக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 247-ம், கல்கட்டகி பா.ஜனதா எம்.எல்.ஏ. நிம்பன்னவருக்கு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 45-ம், குருமித்கல் தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. நாகனகவுடா, அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவாக ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 242-ம், கடூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பெல்லி பிரகாசுக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 112-ம் என 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ செலவாக ரூ.35 லட்சத்து 44 ஆயிரத்து 281 ஆகி உள்ளது. இந்த 10 எம்.எல்.ஏ.க்களும் மருத்துவ செலவு ரசீதை அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அதன்பேரில் அந்த தொகையை அரசு செலுத்த உள்ளது.
கொரோனாவால் நிதிச்சுமை ஏற்பட்டு இருக்கும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் மருத்துவ செலவுக்கு அரசு ரூ.35.50 லட்சம் செலுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் மக்கள் பணத்தை எம்.எல்.ஏ.க்கள் வீணடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story