பெரம்பலூரில் பரபரப்பு: உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி - கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


பெரம்பலூரில் பரபரப்பு: உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி - கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 11 Oct 2020 4:30 AM IST (Updated: 11 Oct 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண்ணை இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர்- எளம்பலூர் ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்த செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் அம்மு என்ற ரோஷ்னி (வயது 23). செல்வராஜ் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பி.எஸ்.சி. பி.எட் படித்துள்ள ரோஷ்னிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காட்டு கொட்டகை கிராமம் வடக்கு காட்டில் வசித்து வரும் தாய்மாமா ரெங்கராஜ் மகன் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ஓசூரில் தங்கியிருந்து பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரராகவன் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ரோஷ்னி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

மேலும் ரோஷ்னி திருமணத்தின்போது அவரது பெற்றோர் 43 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வீரராகவன் குடும்பத்திற்கு வரதட்சணையாக வழங்கியதாகவும் தற்போது அவை அனைத்தும் கணவர் வீட்டில் உள்ளதாகவும் தெரிகிறது. தற்போது வரை நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை ரோஷ்னி திரும்ப கேட்டும், கணவர் குடும்பத்தினர் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் நகர் முழுவதும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம், ரோஷ்னி இறந்து விட்டதாக அவருடைய புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட ரோஷ்னியின் உறவினர்கள், தோழிகள் துக்கம் விசாரிப்பதற்காக ரோஷ்னியின் வீட்டிற்கே சென்றுள்ளனர். அப்போது அங்கு ரோஷ்னி உயிருடன் இருப்பதை கண்டு அவர்கள் திகைத்தனர். மேலும் பலர் ரோஷ்னியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோஷ்னி மற்றும் அவரது பெற்றோர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தனர். மேலும் போலீசார் சார்பில் நேற்று பெரம்பலூரில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனிடம், ரோஷ்னி தனது பெற்றோருடன் வந்து கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். இது தொடர்பாக அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தார். ரோஷ்னி கொடுத்த புகாரில், உயிருடன் இருக்கும் என்னை இறந்து விட்டதாக கூறி சுவரொட்டி ஒட்டியது எனது கணவர் குடும்பத்தினராகத்தான் இருக்கும், அவர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும், என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருடன் இருக்கும் பெண்ணை இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story