2018-ம் ஆண்டு போதைப்பொருள் சிக்கிய வழக்கு: நடிகை ராகிணியின் நண்பரிடம் மீண்டும் விசாரிக்க போலீஸ் முடிவு
போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ராகிணி திவேதியின் நண்பரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பெங்களூரு,
2018-ம் ஆண்டு போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக, போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் ராகிணி திவேதியின் நண்பரும், வட்டார போக்குவரத்து ஊழியரான ரவிசங்கர், சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, பிரதிக் ஷெட்டி, வைபவ் ஜெயின், லோயம் பெப்பர் சம்பா, பினால்டு, பிரசாந்த் ரங்கா உள்பட சிலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவில் போதைப்பொருள் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு போதைப்பொருள் சிக்கிய வழக்கில், ரவிசங்கருக்கும் தொடர்பு இருப்பது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
போதைப்பொருள் விவகாரத்தில் ரவிசங்கர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கேட்டனர். இதற்கு சிறப்பு கோர்ட்டும் அனுமதி அளித்து இருந்தது.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவிசங்கரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அளித்த உத்தரவு ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதனால் ரவிசங்கரை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க சிறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ரவிசங்கரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து செல்ல உள்ளனர். அவரிடம் இன்று முதல் வருகிற 16-ந் தேதி வரை அதாவது 6 நாட்கள் விசாரணை நடக்க உள்ளது. இந்த விசாரணையின் போது போதைப்பொருள் வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோதல் எதிரொலி: சஞ்சனா, ராகிணி தனித்தனி அறைகளில் அடைப்பு
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 2 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் ராகிணி மின்விளக்கை போட்டு புத்தகம் படிப்பதால் சஞ்சனாவுக்கு இடைஞ்சல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபோல சஞ்சனா அதிகாலையிலேயே எழுந்து மின்விளக்கை போட்டு யோகா செய்து ராகிணி தொல்லை கொடுப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக நடிகைகள் 2 பேருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி இருந்தது. இதனால் சக கைதிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மோதல் எதிரொலியாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனாவை தனித்தனி அறைகளில் சிறை அதிகாரிகள் அடைத்து உள்ளனர். அவர்களது அறைகளுக்கு முன்பு தலா 2 சிறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சஞ்சனாவின் பிறந்தநாளை கொண்டாட முடியாததால் தாய் வருத்தம்
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நடிகை சஞ்சனாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சஞ்சனா ஆடம்பரமாக கொண்டாடி வந்தார். இதற்காக ஏற்பாடுகளை அவரது நண்பர் ராகுல் செய்து வந்தார். கடந்த ஆண்டு கூட தனது பிறந்தநாளை பெங்களூரு, மும்பையில் சஞ்சனா கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால் இந்த ஆண்டு சஞ்சனா தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. அவர் சிறையில் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிறந்தநாளை கொண்டாட அவர் சிறை அதிகாரிகளிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த நிலையில் சஞ்சனாவின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனதால் அவரது தாய் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சஞ்சனா பிறந்தநாளை அவரது தாய் ரேஷ்மா மிகவும் விமரிசையாக கொண்டாடி வந்து உள்ளார். மேலும் கோவிலுக்கு சென்று சஞ்சனாவின் பெயரில் பூஜையும் செய்து வந்து உள்ளார். இந்த ஆண்டு சஞ்சனா சிறையில் இருப்பதால் அவரது தாய் சோகத்தில் உள்ளதாகவும், சஞ்சனா பெயரில் கோவிலில் பூஜை செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story