மாவட்டத்தில், பெரியார் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைப்பு - தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


மாவட்டத்தில், பெரியார் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைப்பு - தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Oct 2020 4:00 AM IST (Updated: 11 Oct 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு கருதி இரும்பு கூண்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்க தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமரியாதை செய்யப்படுவதும், காவி சாயம் பூசப்படுவதுமான சம்பவத்தால் பிரச்சினை உருவாகி வருகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் இனாம் குளத்தூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து இரும்பு கூண்டு அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, ஸ்ரீரங்கம், துவாக்குடி அண்ணா வளைவு, காட்டூர், மேல கல்கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, சோமரசம்பேட்டை, இனாம் குளத்தூர், லால்குடி, ஆங்கரை, அன்பில் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பெரியார் சிலைகள் இரும்பு கூண்டுகளால் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே துவாக்குடி அண்ணா விளைவில் உள்ள பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டது. அதையறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூண்டு அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். அதற்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம், பெரியார் சிலைகளுக்கு கூண்டு அமைக்க வேண்டாம் என புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெரியார் சிலைகளுக்கான பாதுகாப்பை தி.க.வினர் ஏற்றுக்கொள்வதாக எழுதி கொடுத்தால் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். அதற்கு தி.க.வினர் தரப்பில் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்கள்.

Next Story