காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2020 4:00 AM IST (Updated: 11 Oct 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகமானது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 8-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 105 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 24 கனஅடியாக அதிகரித்தது. இது நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 22 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகமாகி உள்ளது .

அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 16 ஆயிரத்து 950 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.03 அடியாக இருந்தது.

Next Story