கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடைபாதை - கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைபாதை அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் கிரன்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி,
மாவட்டத்தின் தலைநகரமாக கள்ளக்குறிச்சி உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் வந்து செல்கின்றன. இது தவிர கார், லாரி, டிராக்டர், ஆட்டோ, இருசக்கரவாகனம் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைக்காக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் கள்ளக்குறிச்சியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுமக்களும் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுவார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு மேற்குப் புறத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் சாலையோரத்தில் உள்ள மின்மாற்றி ஆகியவற்றை அப்புறப்படுத்தி காந்திரோடு பள்ளிக்கட்டிடம் வரை பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடைபாதை அமைக்க உள்ள இடத்தை கலெக்டர் கிரண் குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நீதிதேவன், உதவி மின் பொறியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோரிடம் நடை பாதை அமைப்பது சம்பந்தமாகவும், சாலையோரத்தில் உள்ள மின்மாற்றியை நகர்த்தி வைக்கப்படுவது சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தினர்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, தாசில்தார் பிரபாகர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) பாரதி, வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் அக்பர் பாஷா ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story