நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் வீணாக கொட்டப்படும் பச்சை தேயிலை


நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் வீணாக கொட்டப்படும் பச்சை தேயிலை
x
தினத்தந்தி 11 Oct 2020 4:00 AM IST (Updated: 11 Oct 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் பச்சை தேயிலை வீணாக கொட்டப்படும் நிலை உள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. தமிழக அரசின் தொழில் வணிகத்துறையின் கீழ் இன்கோசர்வ் கட்டுப்பாட்டில் 14 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், 9 டேன்டீ தொழிற்சாலைகள், 119 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகள் தரமில்லாத பச்சை தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியது. அதற்கு நிர்வாகம் விவசாயிகள் நல்ல தரமான தேயிலையை வினியோகிக்க வேண்டும். தரமில்லாத தேயிலையை கொள்முதல் செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் 30 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், பறித்த பச்சை தேயிலையை சாலையில் வீணாக கொட்டப்படும் அவல நிலை இருக்கிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு தேயிலை தொழிற்சாலைகள் தரமான இலைகளை கொள்முதல் செய்து தேயிலைத்தூள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து கொழுந்து இலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளுக்கு மவுசு உள்ளது. இந்த வழிமுறைகளை தேயிலை வாரியம் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

அசாம் மாநிலத்தில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டதால் நீலகிரியில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 என விலை உயர்ந்து உள்ளது. விவசாயிகள் தரமான தேயிலையை வினியோகம் செய்ய வேண்டுமென்று தனியார் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதலை நிறுத்தி உள்ளது. தொழிற்சாலைகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சிலர் தொடர்ந்து தரமான பச்சை தேயிலையை வழங்கி வருகின்றனர். அதே போல் மற்ற விவசாயிகளும் தரமான தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story