சின்னமனூர் பகுதியில் ‘கஞ்சா சிகரெட்’ விற்பனை அமோகம் - போதை பழக்கத்துக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள்


சின்னமனூர் பகுதியில் ‘கஞ்சா சிகரெட்’ விற்பனை அமோகம் - போதை பழக்கத்துக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 11 Oct 2020 3:45 AM IST (Updated: 11 Oct 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் பகுதியில் ‘கஞ்சா சிகரெட்’ விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

சின்னமனூர்,

தேனிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகராட்சியாக சின்னமனூர் விளங்குகிறது. சின்னமனூரை சுற்றிலும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சின்னமனூர் வந்து தான் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் சின்னமனூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலேயே படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தாலும், வெளி மாவட்டங்களில் இருந்து சின்னமனூருக்கு வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், சொந்த ஊருக்கு திரும்பி செல்லாமல் சின்னமனூரிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் சின்னமனூர், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்களை கஞ்சா மற்றும் போதை பழக்கத்துக்கு ஒரு கும்பல் அடிமையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்களை சின்னமனூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தாலும், புதிய யுக்திகளை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களை தொடர்ந்து போதை பழக்கத்துக்கு அவர்கள் அடிமையாக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சின்னமனூர் உழவர் சந்தை, வண்டிப்பேட்டை, பெருமாள் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர் போன்ற பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், ஊசிகள் விற்பனை அதிக அளவில் நடக்கிறது.

கஞ்சாவை நேரடியாக விற்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் அதனை சிகரெட்டுகளில் அடைத்து ஒரு கும்பல் தற்போது சின்னமனூரில் விற்பனை செய்து வருகிறது. இதன் விற்பனை அமோகமாக உள்ளது. இதை இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் போதை ஊசியும் இளைஞர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த ஊசிகளை போட்டுக்கொண்டால் அவர்களிடம் எந்தவித மாற்றமும் தெரியாது என்பதால் பெற்றோராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே கஞ்சா சிகரெட், போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story