திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 291 சிறு பாசன குளங்கள் சீரமைப்பு - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 291 சிறு பாசன குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கான செலவு ரூ.10 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள பாசன சங்கம், நிரீனை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆகியோர் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லட்சுமணப்பட்டி ஊராட்சி காக்காத்தோப்பு பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் அணைக்கட்டு சீரமைப்பு, வாய்க்கால் மறுசீரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஸ்ரீராமபுரம் ஊராட்சி எஸ்.ஆர்.புரம், பூதம்பட்டி ஏ.டி.காலனி, பூத்தாம்பட்டி, கோவிலூர் ஊராட்சி தொப்பநாயக்கனூர், நல்லமனார்கோட்டை ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.4 கோடியே 45 லட்சத்திலும், 2019-2020-ம் ஆண்டில் ரூ.34 கோடியே 35 லட்சத்திலும் நீர்நிலைகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் ரூ.12 கோடியே 17 லட்சத்தில் 291 சிறு பாசன குளங்களும், ரூ.3 கோடியே 6 லட்சத்தில் 380 குட்டை, ஊருணிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சேதுராமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)கங்காதாரணி, உதவி செயற்பொறியாளர் முகமது ஷாஜகான், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story