புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 11 Oct 2020 10:55 PM IST (Updated: 11 Oct 2020 10:55 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

ஈரோடு,

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். இதில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று புரட்டாசி மாதத்தின் 4-வது மற்றும் கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஈரோடு கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்களும் திரளாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கோவிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதன் வழியாக பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு சென்றார்கள்.

செந்தூர அலங்காரம்

கோவிலின் நுழைவு வாயிலில் அனைத்து பக்தர்களின் கைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலமாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஈரோடு மோளகவுண்டன்பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அங்கு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கு செந்தூர அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story