குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சப்பர ஊர்வலத்துக்கு தடை உதவி கலெக்டர் அறிவிப்பு


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சப்பர ஊர்வலத்துக்கு தடை உதவி கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 2:24 AM IST (Updated: 12 Oct 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், சப்பர ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா தெரிவித்துள்ளார்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது.

10-ம் நாளான வருகிற 26-ந்தேதி இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1, 10, 11 ஆகிய முக்கிய விழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற விழா நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் வந்து தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதனையடுத்து முக்கிய விழா நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தசரா குழுவினரும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில், தசரா குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற தசராக்குழுவினர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

தசரா குழுவினர் பேசுகையில், ‘தசரா குழுக்கள் வெளியூர், பக்கத்து கிராமங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று காணிக்கை வசூல் செய்யவும், 10-ம் நாள் திருவிழாவில் மேடை அமைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், முத்தாரம்மன் கோவிலில் சப்பர பவனி நடைபெறவும் அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

சப்பர ஊர்வலத்துக்கு தடை

இதற்கு பதிலளித்து உதவி கலெக்டர் தனப்பிரியா பேசும்போது கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே குழுக்கள் ஊர்வலம், சப்பர ஊர்வலத்துக்கு கட்டாயம் அனுமதி கிடையாது. சப்பர ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த ஆண்டில் (2021) தசரா திருவிழாவை சிறப்பாக கொண்டாடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் ஆய்வாளர் பகவதி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் தசரா குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story