அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை ஐ.பி.எஸ். பேட்டி


அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை ஐ.பி.எஸ். பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2020 4:45 AM IST (Updated: 12 Oct 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பா.ஜ.க. துணைத்தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். கூறினார்.

திருச்சி, 

பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணியில் எந்த குழப்பமும், சலசலப்பும் இல்லை. புதுக்கூட்டணி தேவை என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை. கூட்டணி குறித்த முடிவை பா.ஜ.க. தலைமை எடுக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் நடக்கும்போது, மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் நடந்த இளம்பெண் பாலியல் படுகொலை சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற நாடுகளையும், மற்ற நாடுகளின் தலைநகரை காட்டிலும், டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எப்போதாவது நடக்கும் பிரச்சனைகளை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கொள்கை ரீதியாகவே அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. வேளாண்மை திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருவதை பார்க்க முடிகிறது. தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. திராவிட கட்சிகளில் தி.மு.க. குடும்ப அரசியல் உள்பட எல்லா விஷயங்களிலும் மித மிஞ்சி இருக்கிறது.

தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு பலம் இல்லாமல் இல்லை. அனைத்து பூத்துகளிலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story