நிலையூர் கால்வாயில் மடைகள் சீரமைப்பு பொதுப்பணித்துறை நடவடிக்கை


நிலையூர் கால்வாயில் மடைகள் சீரமைப்பு பொதுப்பணித்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2020 10:40 AM IST (Updated: 12 Oct 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியால் நிலையூர் கால்வாயில் பழுதடைந்த மடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள 7 கண்மாய்களுக்கு வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். வானம் பார்த்த பூமியாக விவசாய நிலங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிலையூர் கால்வாயை சார்ந்துள்ள மடைகள், தண்ணீரை பிரித்து கொடுக்கக்கூடிய தடுப்பணைகள், சிறிய பாலங்கள் யாவும் பழுதாகி இருந்தது. இதனால் கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு ஒரே சீராக தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் வேதனைப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

அதன் எதிரொலியாக மதுரை மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறையின் கீழ் சேதமடைந்த சிறிய பாலங்கள் மற்றும் மடைகளை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர்கள் மாயகிருஷ்ணன், மோகன்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் மழை காலம் நெருங்குவதாலும், பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் நிலையும் உருவாகி வருகிறது. இதனால் நிலையூர் கால்வாயில் தண்ணீர் நிரம்பி இருபுறமும் கரையை தழும்பி வரும் போது உடைப்பு ஏற்பட்டு விடும். ஆனால் அதை கடந்த காலங்களில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக போனது. அதே நிலை தற்போதும் வரக்கூடாது என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூடைகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story