கழிவுநீர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


கழிவுநீர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 13 Oct 2020 12:49 AM IST (Updated: 13 Oct 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

உறவினர்களுக்கு மகளின் திருமண பத்திரிகை கொடுக்க சென்றபோது கழிவுநீர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி சாந்தி (வயது 54). இவர்களுடைய மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வைத்துக்கொண்டிருந்தார்.

நேற்று இரவு தனது உறவினர் செல்வக்குமார் (59) என்பவருடன் மொபட்டில் காட்டுப்பாக்கம் பகுதியில் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வைப்பதற்காக சென்றார். மொபட்டை செல்வக்குமார் ஓட்டினார். அவருக்கு பின்னால் சாந்தி அமர்ந்து சென்றார்.

காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் மெயின் ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த கழிவுநீர் லாரி, இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சாந்தி லாரி சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

செல்வக்குமார் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கழிவுநீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story