பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுபானை, மண் அடுப்பு வழங்கவேண்டும்


பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுபானை, மண் அடுப்பு வழங்கவேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2020 8:45 PM GMT (Updated: 12 Oct 2020 8:45 PM GMT)

பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுபானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும் என்று குலாலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் மகேந்திரன் தலைமையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், செயலாளர் வெங்கடேசன் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

திண்டுக்கல்லில் முடி திருத்தும் தொழிலாளியின் மகள் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. அந்த வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு, குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டனர். போலீசாரை நம்பி பயன் இல்லை என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வழக்கில் முறையாக நடந்து கொள்ளாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அம்பேத்கர் சிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன், தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘ஈரோடு மாநகர் பகுதியில் அரசு சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மேற்கண்ட அமைப்பினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று மனு கொடுத்தனர்.

புதுபானை-மண் அடுப்பு

ஈரோடு மாவட்ட குலாலர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக பச்சை அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் புது அரிசியை புது பானையில் வைத்து பொங்கலிட புது பானை ஒன்றும், புது மண் அடுப்பு ஒன்றும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story