காஞ்சீபுரம் மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் லாரிகள் மோதி 3 வாலிபர்கள் பலி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் லாரிகள் மோதி 3 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 12 Oct 2020 11:15 PM GMT (Updated: 12 Oct 2020 8:52 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில் லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியாயினர்.

ஸ்ரீபெரும்புதூர், 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது நண்பர் ரசன்குமார் (27) என்பவரும், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில், தண்டலம்-பேரம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி பகுதியை கடந்த போது, அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த கார்த்திக், ரசன்குமார் ஆகிய இருவர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கார்த்திக், ரசன்குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி தப்பி சென்று தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் அதே போல் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் அம்பேத்கர் நகர் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூரில் இருந்து படப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மண்ணிவாக்கம் மேம்பாலம் கீழே செல்லும்போது, அதே மார்க்கத்தில் பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கர விபத்தில் சதீஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story