ரேஷன் கடைகளில் அன்றாடம் பிரச்சினை: விரல்ரேகை பதிவு முறையை மாற்றாவிட்டால் போராட்டம் - ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் எச்சரிக்கை


ரேஷன் கடைகளில் அன்றாடம் பிரச்சினை: விரல்ரேகை பதிவு முறையை மாற்றாவிட்டால் போராட்டம் - ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2020 4:15 AM IST (Updated: 13 Oct 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு முறையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

திருச்சி, 

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் தற்போது விரல்ரேகை பதிவின் மூலம் (பயோமெட்ரிக் முறை) குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல குறைபாடுகள் இருப்பதால் மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், பொருளாளர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நியாயவிலை கடைகளில் டவர் பிரச்சினை, சர்வர் பிரச்சினை, 4 ஜி இணைப்பு பிரச்சினை போன்றவற்றின் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை பணியாளர்களால் வினியோகம் செய்ய முடியவில்லை. எந்திரங்கள் தரமான வகையில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். சாதாரணமாக ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விரல் ரேகை பதிவு முறையால் பொருள் வழங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. தொழில்நுட்ப கோளாறினால் ஏற்படும் இந்த பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயோமெட்ரிக் எனப்படும் விரல்ரேகை பதிவு முறைக்கு மாற்றாக விழித்திரை பதிவின் அடிப்படையில் பொருட்கள் வினியோகம் செய்யலாம். இல்லையென்றால் இந்த பிரச்சினையை தீர்க்கக்கோரி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story