திருவானைக்காவல் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க பள்ளிவாசல் முகப்பு பகுதி இடிப்பு: முஸ்லிம்கள் மறியல்-பரபரப்பு
திருவானைக்காவல் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க பள்ளிவாசல் முகப்பு பகுதி இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம் வலதுபுறம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக அங்குள்ள பள்ளிவாசல் முகப்பு பகுதியை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை பள்ளிவாசல் முகப்பு பகுதியை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். இதனையொட்டி ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முஸ்லிம்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளிவாசலை இடிக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் பள்ளிவாசல் முகப்பு பகுதியை இடித்தால் தான் சர்வீஸ் சாலை அமைக்க முடியும் அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒருவர், பள்ளிவாசலுக்குள் சென்று அமர்ந்து கொண்டார். அவரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் வெளியே வர மறுத்ததால் அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியே தூக்கி வந்தனர். இதையடுத்து பள்ளிவாசல் முகப்பு பகுதி இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடிக்கப்பட்ட முகப்பு பகுதியை மீண்டும் கட்டித்தரக்கோரியும் முஸ்லிம்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர்கள் பவன்குமார்ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து முஸ்லிம் அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இடத்தை நாளை (புதன்கிழமை) சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருவானைக்காவல் பகுதியில் நேற்று காலை முதல் மாலைவரை பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story