திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 13 Oct 2020 4:49 AM IST (Updated: 13 Oct 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் வந்து நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா நாகையகோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கருகிய நிலக்கடலை, மக்காசோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் மழையின்றி கருகிய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு, மனு கொடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாகையகோட்டை பகுதியில் மானாவாரியாக நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், உளுந்து ஆகியவற்றை பயிரிட்டோம். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எங்கள் பகுதியில் மழை பெய்யவில்லை.

இதனால் தண்ணீரின்றி 300 ஏக்கரில் பயிரிட்ட நிலக்கடலை, 150 ஏக்கர் மக்காச்சோளம், 100 ஏக்கர் உளுந்து, 250 ஏக்கர் சோளம் கருகிவிட்டன. இதுதவிர 50 ஏக்கர் பரப்பளவிலான கண்வலி கிழங்கு பயிரும் காய்ந்து விட்டது. இதன் காரணமாக கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறோம். அதிலும் ஒருசில விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யவில்லை. எனவே, மழையின்றி கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

தென்னக பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில் நிர்வாகிகள், பார்வையற்றவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்களின் சங்கத்துக்கு நிதிஉதவி பெற்றுத்தருவதாக கூறி, ஒருவர் சங்கத்தின் ஆவணங்களை வாங்கி சென்றார். பின்னர் அவரும், மற்றொரு நபரும் சேர்ந்து மேலும் சில ஆவணங்களை திருடி சென்றனர். இந்த நிலையில் தற்போது சங்கத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் சங்க அலுவலக சாவிகளை கேட்டு மிரட்டுவதோடு, முள்வேலியை சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆவணங்களை திரும்ப பெற்றுத்தர வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

கோடசில்லாம்பட்டியை சேர்ந்த சிலர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்திய பாதையை ஒருவர் அடைத்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். அப்போது ஒருவர் சாலையில் படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, மனுகொடுக்க அழைத்து சென்றனர்.


Next Story