வடுவூர் அருகே விவசாயிகள், நெல்லை சாலையில் கொட்டி மறியல் போக்குவரத்து பாதிப்பு


வடுவூர் அருகே விவசாயிகள், நெல்லை சாலையில் கொட்டி மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 5:11 AM IST (Updated: 13 Oct 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் அருகே விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் விளையாட்டு அரங்கம் மற்றும் வடுவூர் வடபாதி ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களில் அரசு நிர்ணயித்தபடி நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதலை அதிகரிக்க வலியுறுத்தி நேற்று வடுவூர் பெரியார் சிலை முன்பு மன்னார்குடி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு கொள்முதல் நிலையங்களில் தேக்கம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதிசரணம் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் மன்னார்குடி- தஞ்சாவூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story