கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 60). விவசாயி. இவர், கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரிமளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் திறந்திருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பீர்முகமதுவின் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த தங்கநெக்லஸ், காசு மாலை, வளையல்கள், தோடுகள், தங்க ஆரம், தங்க சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தவிர புதுக்கோட்டையிலிருந்து தடய அறிவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பூட்டியிருந்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story