குழாய் பதிக்க வெடிவைத்து குழி தோண்ட எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்


குழாய் பதிக்க வெடிவைத்து குழி தோண்ட எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2020 8:30 AM IST (Updated: 13 Oct 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்க வெடிவைத்து குழிதோண்ட எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

அவினாசி,

அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிக்காக மடத்துப்பாளையம் ரோட்டில் கடந்த 10-ந் தேதிகுழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது பெரிய பாறைகளை உடைப்பதற்காக வெடி வைக்கப் பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து இங்கு 300 குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகள் மண் சுவர் மற்றும் ஓட்டு வீடுகளாக உள்ளது. வெடி வைக்கும் போது அதிர்வு ஏற்படுகிறது.

இதனால் பழைய மண்சுவர் வீடுகள் இடிந்து குடியிருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே வெடி வைக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்று அப்பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் அப்பகுதியில் குழி தோண்டும் பணிக்காக வெடி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் அங்கு வந்து குழி தோண்டும் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இங்கு வெடி வைக்கக்கூடாது என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்வதை நாங்கள் ஏற்க மாட்டோம். என்று கூறி அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். இதையறிந்த அத்திக்கடவு- அவினாசி திட்ட அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் வெடி வைப்பது தவிர்க்கப்படும் என்று உறுதி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story