இந்த ஆண்டு 59 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்


இந்த ஆண்டு 59 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2020 10:54 AM IST (Updated: 13 Oct 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு இது வரை 59 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி த்துள்ளார்.

கடலூர்,

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின் கீழ் கையெழுத்து இயக்கம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, தனது கையெழுத்தை பதிவு செய்து, தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிறைவு பெற்ற 17 பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசியதாவது:-

தமிழக அரசு குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் பெண் சிசு கொலை வழக்கத்தை தடுக்கும் நோக்கில் சிசு கொலையில் இருந்து மீட்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 49, பெண் குழந்தைகள் 111 ஆக மொத்தம் 160 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை திருமணம் தடுப்பு சட்டப்படி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 64 குழந்தை திருமணங்களும், இந்த ஆண்டு இது வரை 59 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கருவிலேயே பாலினம் கண்டறிவதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால் 10 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து இடை நிறுத்தல் செய்யக்கூடாது. தொடர்ந்து கல்வி பயில செய்ய வேண்டும்.

பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிக்க கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறந்தால் போற்றவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, இணை இயக்குனர் (மருத்துவம்) ரமேஷ்பாபு , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா , மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (கடலூர்) திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என கலெக்டர் முன்னிலையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story