சின்னசேலம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய காதலன் சேலத்தில் தற்கொலை - பரபரப்பு தகவல்கள்


சின்னசேலம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய காதலன் சேலத்தில் தற்கொலை - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Oct 2020 12:15 PM IST (Updated: 13 Oct 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய காதலன் சேலத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம்,

சேலம் உடையாப்பட்டி பெருமாள் கோவில்மேட்டில் உள்ள ஒரு மரத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நின்றிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் பெருந்துறை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவர் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து கார் ஓட்டி வந்தார். இவருக்கும் சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியின் குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு வந்தனர். ஆனாலும் சதீசும், அந்த சிறுமியும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமியுடனான பழக்கத்தை கைவிட முடிவு செய்த சதீஷ், தனக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார். மேலும், பொய்யாக ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்து, அதை சிறுமிக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்த சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன்னை பார்க்க வருமாறும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் சதீஷ் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் வந்தார். பின்னர் சதீசும் அந்த சிறுமியும் கச்சிராயபாளையம் சுண்ணாம்புக்கல் ஓடை என்ற பகுதியில் சந்தித்து பேசினர். அங்கு அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் சிறுமியின் கைகளை துப்பட்டாவால் கட்டிவிட்டு, அவரை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் சிறுமியின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பின்னர் சதீஷ் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு கழுத்தில் தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறுமி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதீசை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் சேலம் வந்த சதீஷ், கத்தியால் சிறுமியின் கழுத்தில் அறுத்ததில் அவர் இறந்து விட்டதாக நினைத்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் தற்கொலைக்கு முன்பு சதீஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியது. அதில், காதலித்த சிறுமியை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டேன் என்றும், இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story