பஸ்சில் நூதன முறையில் பணம் திருடிய பெண்கள் கைது
பஸ்சில் நூதன முறையில் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மூக்கையூர் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி காளியம்மாள் (வயது36). இவர் அழகன்குளத்தில் இருந்து டவுன்பஸ்சில் ராமநாதபுரம் வந்துள்ளார். புதிய பஸ் நிலையத்தில் இறங்க முயன்றபோது பஸ்சிற்குள் அவசர அவசரமாக இடித்துக்கொண்டு ஏறுவதுபோல் நூதன முறையில் 2 பெண்கள் நைசாக காளியம்மாள் பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ திருடிக்கொண்டு பஸ்சின் மறுவழியாக இறங்கி தப்பி சென்றுவிட்டனர்.
பையில் வைத்திருந்த பணத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் அருகில் வந்து நின்றவர்களிடம் விசாரித்துள்ளார். யாருக்கும் தெரியாததால் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து காளியம்மாள் புகார் செய்தார். போலீசார் காளியம்மாள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரை உஷார் படுத்தினர். சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது கேணிக்கரை அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து வந்து விசாரித்தபோது அவர்கள்தான் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் சுத்துகுளம் பகுதியை சேர்ந்த இந்திரா (40) , கணேசன் மனைவி கவிதா (35) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து காளியம்மாளிடம் திருடிய பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story