செய்யாறு வாரச்சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை மனு


செய்யாறு வாரச்சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 13 Oct 2020 1:00 PM GMT (Updated: 13 Oct 2020 1:02 PM GMT)

செய்யாறு வாரச்சந்தையில் கடைவைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கக்கோரி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை,

செய்யாறு சந்தை திடலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி சந்தை நடந்து வந்தது. அங்கு செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக வாரச்சந்தை திறக்க தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் செய்யாறில் உள்ள வாரச்சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர் வியாபாரிகளால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையரிடம் உள்ளூர் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்வதற்கு ஏற்ப சந்தை திடலில் தரையில் கோடுகள் வரைந்து வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகள் செய்யாறு சந்தைக்கு வந்தனர். உள்ளூர் வியாபாரிகள், வெளியூர் வியாபாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். வெளியூர் வியாபாரிகள் வியாபாரம் செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்யாறு வாரசந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் வாரச்சந்தையில் கடைவைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனு கொடுத்த அவர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்களுக்கு செய்யாறு வாரச்சந்தையில் கடைவைத்து அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

Next Story