ஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


ஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2020 7:00 PM IST (Updated: 13 Oct 2020 6:42 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கட்சியே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டார்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

வாணியம்பாடி,

அ.தி.மு.க. தலைமை கழகம் உத்தரவுப்படி கட்சியின் ஆலங்காயம் ஒன்றியம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மேற்கு ஒன்றிய செயலாளராக ஜி.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினராக பி.மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளராக மஞ்சுளாகந்தன், மாவட்ட மாணவரணி செயலாளராக சி.கே.எம்.தனஞ்செயன் நியமிக்கப்பட்டனர்.

இதேபோல் உதயேந்திரம் பேரூராட்சி செயலாளராக சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக முனுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நியமனம் செய்து அறிவித்தனர்.

புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ஆலங்காயம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ,, கோவி.சம்பத்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் டி.பாண்டியன், நகர செயலாளர் ஜி.சதாசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர் தபரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சருமாக கே.சி.வீரமணி, மாவட்ட துணை செயலாளரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபீல் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். அண்ணா, காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.

அப்போது அமைச்சர் வீரமணி பேசுகையில், “அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்சியே இருக்காது என்று கூறியவர்கள் தற்போது தற்போது காணாமல் போய் உள்ளனர். வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் அ.தி.முக.மகத்தான வெற்றிப் பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சிக்கு துணை நிற்க ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்” என்றார்.

அமைச்சர் நிலோபர்கபீல் பேசுகையில், “தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் பாராட்டுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலின் போது தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இப்போது அத்தகைய அறிவிப்புகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது நடைபெற்று வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியே தொடர்ந்து மீண்டும் மலர நீங்கள் ஒவ்வொரும் பாடுபட வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், மாவட்ட ஜெயல்லிதா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் எம்.கோபால், ரமேஷ், என்.திருப்பதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.பி.ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, தேவி, குமார், ரேவதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பரமசிவம், தேவன், சிவானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஆலங்காயம் ஜெயலலிதா பேரவை செயலாளர் கந்தன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Next Story