வேலூர் அருகே, கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வேலூர் அருகே, கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2020 8:30 PM IST (Updated: 13 Oct 2020 9:02 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

வேலூர்,

வேலூர் ஓட்டேரி அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி கிராமத்தில் சாலையோரம் ராதாருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். நேற்று முன்தினம் புரட்டாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிச் சென்றனர். இதையடுத்து நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டும், அதில் இருந்த நாணயங்கள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். போலீசார் கூறுகையில், உண்டியலில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story