தொற்று அதிகரிப்பதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கொரோனா பரிசோதனை - ஒரு வாரத்தில் 1,500 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு


தொற்று அதிகரிப்பதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கொரோனா பரிசோதனை - ஒரு வாரத்தில் 1,500 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 9:15 PM IST (Updated: 13 Oct 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

தொற்று அதிகரிப்பதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு வாரத்தில் 1,500 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் அருகாமையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் பாதைகள் முதலில் அடைக்கப்பட்டு இருந்தன. தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் குமரி- கேரள எல்லை வழிப்பாதைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கேரளாவில் இருந்து களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வருபவர்கள் மற்றும் இ-பாஸ் பெற்று வருபவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கேரளாவில் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து களியக்காவிளை பாதையைத்தவிர குமரி மாவட்டத்துக்கு வரும் பிற கேரள வழிப்பாதைகள் அனைத்தையும் மூட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

மேலும் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த வழிப்பாதைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. களியக்காவிளை வழியாக கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் நாள் ஒன்றுக்கு 150 முதல் 300 பேருக்கு களியக்காவிளை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 1500 பேருக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story