இலாகா மாற்றத்தால் அதிருப்தி மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர் எடியூரப்பாவுடன் சந்திப்பு முதல்-மந்திரி சமாதானப்படுத்தினார்


இலாகா மாற்றத்தால் அதிருப்தி மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர் எடியூரப்பாவுடன் சந்திப்பு முதல்-மந்திரி சமாதானப்படுத்தினார்
x
தினத்தந்தி 14 Oct 2020 3:55 AM IST (Updated: 14 Oct 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

இலாகா மாற்றப்பட்டதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பாவை மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இலாகா மாற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்த மந்திரி ஸ்ரீராமுலுவை, முதல்-மந்திரி எடியூரப்பா சமாதானப்படுத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆயினும் மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. தினமும் சராசரியாக 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் விஷயத்தில் மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் 3 மந்திரிகளின் இலாகாவை மாற்றம் செய்து உத்தரவிட்டார். மந்திரி ஸ்ரீராமுலுவிடம் இருந்த சுகாதாரத்துறையை பறித்து மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகருக்கு கூடுதலாக எடியூரப்பா வழங்கியுள்ளார். ஸ்ரீராமுலுவுக்கு சமூகநலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மந்திரி ஸ்ரீராமுலு கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினமே முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தான் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை மந்திரிகள் ஸ்ரீராமுலு மற்றும் சுதாகர் ஆகியோர் நேற்று ஒன்றாக நேரில் சந்தித்து பேசினர்.

சேவையாற்றுவேன்

அப்போது அதிருப்தியில் இருக்கும் ஸ்ரீராமுலுவை எடியூரப்பா சமாதானப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, மருத்துவக்கல்வித்துறை ஆகிய 2 துறைகளும் ஒருவரிடமே இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று எடியூரப்பா எடுத்துக்கூறி அவரை சமாதானப்படுத்தினார். இந்த சமாதானத்தை ஸ்ரீராமுலு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் முன்பே சமூக நலத்துறையை ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கேட்டேன். ஆனால் அப்போது அந்தத் துறை எனக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது சமூக நலத்துறையை எடியூரப்பா எனக்கு ஒதுக்கியுள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத் துறையை என்னிடம் இருந்து பறித்ததற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையை திறம்பட நிர்வகித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்.

அடிப்படையில் ஒரு டாக்டர்

மந்திரி சுதாகர் அடிப்படையில் ஒரு டாக்டர். அதனால் அவருக்கு சுகாதாரத் துறையை எடியூரப்பா வழங்கியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எங்களது சக்தியை மீறி பணியாற்றினோம். சுகாதாரம் தொடர்பான விஷயங்களை ஒருவரே நிர்வகிக்க வேண்டும் என்று கருதி சுதாகருக்கு கூடுதலாக சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை நிர்வகிப்பதில் நான் திறம்பட செயல்படவில்லை என்று கூறுவது தவறு.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Next Story