வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் அமையும் நாராயணசாமி உறுதி


வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் அமையும் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 13 Oct 2020 10:58 PM GMT (Updated: 13 Oct 2020 10:58 PM GMT)

புதுவையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

மத்திய அரசு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூற 45 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று கருத்தரங்கு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கட்சியின் விவசாயிகள் அணி தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

வேளாண் சட்டங்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கப்படும். விவசாயிகள் விவசாய கூலிகளாக, அடிமைகளாக மாற்றப்படுவர். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தான் விற்பனை செய்ய முடியும். இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சட்டமாகும். இதனை எதிர்த்து பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேச விரோதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கல்வி, மின்சாரம், மருத்துவம், விவசாயம் என ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமையை பறித்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அவற்றை தனியார் மயமாக்கி வருகிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அரசு மத்தியில் உள்ளது. இது குறித்து நான் பேசினால் என்னை தேச விரோதி என்று கூறுகின்றனர்.

புதுவை மாநிலத்திற்கு சில உரிமைகள் தரப்பட்டுள்ளது. அதையும் மத்திய அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு அனுமதி வழங்கியும், முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கான நிதி அதிகாரத்தை பிரித்து தர கவர்னர் மறுக்கிறார். அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் தர மறுத்து வேண்டுமென்றே கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறார். புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மின்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு இதுவரை செய்துள்ளது. அதனை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்.

மதசார்பற்ற கூட்டணி ஆட்சி

புதுவைக்கு நிதி அதிகாரங்கள் மறுக்கப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடியை தரவில்லை. இது தொடர்பாக எத்தனை முறை வலியுறுத்தினாலும் பதில் இல்லை. இதனை எல்லாம் வைத்து தான் நாங்கள் மத்திய அரசு புதுவையை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. புதுவையில் டெபாசிட் வாங்கவில்லை. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சியினர் பேசி வருகின்றனர். புதுவையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும். இதனை யாராலும் மாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.கே. தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
  • chat