மனைவி இறந்த சோகம் தாங்காமல் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி இறந்த சோகம் தாங்காமல் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2020 4:42 AM IST (Updated: 14 Oct 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்த சோகம் தாங்காமல் 3-வது நாளில் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி,

சென்னை அடுத்த மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 35), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி நெஞ்சுவலி காரணமாக மனமுடைந்து இருந்து வந்த சத்யா வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தனது மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் தியாகராஜன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

கணவரும் தூக்கில் தொங்கினார்

அதைத் தொடர்ந்து, அவரது வீட்டின் சமையலறையில் மனைவி இறந்த அதே இடத்தில் மனைவியின் புடவையால் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன தியாகராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவி இறந்த 3-வது நாளிலே துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்து 3 குழந்தைகள் அனாதையானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story