கறம்பக்குடி அருகே காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


கறம்பக்குடி அருகே காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 8:04 AM IST (Updated: 14 Oct 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே காற்றுக்காக வீட்டு வாசலில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள கீழ மழையூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவிதா (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த மர்ம ஆசாமிகள் அங்கு சென்று கவிதா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்டு விழித்த கவிதா சத்தம் போட்டார். இருப்பினும் அந்த மர்ம ஆசாமிகள் கவிதாவின் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து ரமேஷ் மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

இதேபோல் மழையூர் அருகே உள்ள கெண்டையன்பட்டியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மோட்டார் சைக்கிளையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கறம்பக்குடி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story