திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 14 Oct 2020 8:50 AM IST (Updated: 14 Oct 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று மாலை ஒரு மர்ம தபால் வந்தது. அந்த தபாலில், அஞ்சல் வாரவிழா நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் தலைமை தபால் நிலைய வளாகத்தில் இன்று (அதாவது நேற்று) இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

கடிதத்தை எழுதியது யார்? எந்த ஊரிலிருந்து எழுதப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் இல்லை. வந்தது மொட்டை கடிதம் தான் என்றாலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால் தலைமை தபால் நிலையத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதிசுவாமிநாதன் இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் கண்டோன்மெண்ட் போலீசார் தபால் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டுகள் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் கருவிகளுடன் வந்து தபால் நிலையத்தின் அனைத்து அலுவலக அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன்பின்னர் தான் இது வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு நிபுணர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story