சின்னசேலம் அருகே விஷம் குடித்துவிட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை - குடிப்பழக்கத்தை திருத்துவதற்காக எடுத்த முயற்சி சோகத்தில் முடிந்தது


சின்னசேலம் அருகே விஷம் குடித்துவிட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை - குடிப்பழக்கத்தை திருத்துவதற்காக எடுத்த முயற்சி சோகத்தில் முடிந்தது
x
தினத்தந்தி 14 Oct 2020 12:15 PM IST (Updated: 14 Oct 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே குடிப்பழக்கத்தை திருத்துவதற்காக விஷம் குடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் மகன் வீரமணி (வயது 37) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சசி(29) என்ற மனைவியும், கிஸ்வந்த், ஷஸ்வந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர். வீரமணியின் தந்தை சண்முகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவரது தாய் கொளஞ்சி இவருடைய பாதுகாப்பிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரமணி அவரது தாய் கொளஞ்சியிடம் மதுகுடிப்பதற்கு அவ்வப்போது பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முடிவு கட்ட எண்ணிய கொளஞ்சி நாடகம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். இதனால் சம்பவத்தன்று அவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

இந்நிலையில் வீரமணி தனது தாய் கொளஞ்சியை செல்போனில் தொடர்பு கொண்டு மது குடிக்க பணம் கேட்டார். அப்போது விஷம் குடித்து மயங்கி விழுந்த தான், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து இருப்பதாக கூறி நாடகத்தை நடத்தினார்.

இதை உண்மை என்று நம்பிய வீரமணி மனமுடைந்து விஷம் குடித்தார். பின்னர் தனது மனைவி சசியிடம் எனது தாய் விஷம் குடிப்பதற்கு நான் காரணம் ஆகிவிட்டேன், இதனால் எனக்கு வாழ பிடிக்காததால் விஷத்தை குடித்து விட்டேன் என்று கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீரமணியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று முன்தினம் இரவு வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரமணியின் மனைவி சசி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.குடிகார மகனை திருத்துவதற்காக தாய் நடத்திய நாடகத்தை உண்மை என்று நம்பிய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்தொரசலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story