தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2020 10:24 AM IST (Updated: 14 Oct 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் 7 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட பொருளாளர் தெய்வானை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், ராஜகோபால், பெருமாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாலக்கோட்டில் இந்திய தொழிற்சங்க மைய மாநில குழு உறுப்பினர் கலாவதி தலைமையிலும், பென்னாகரத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட நிர்வாகி ஆரோக்கியதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நல்லம்பள்ளியில் இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணைத்தலைவர் அங்கம்மாள் தலைமையிலும், அரூரில் மாவட்ட துணைத்தலைவர் ரகுபதி தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, ஜெயராம் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் காலக்கெடு நிர்ணயித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் கடமையை செய்யத்தவறிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story