கீழடி பகுதியில், அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய குழிகளை மூடும் பணி தீவிரம்
கீழடி பகுதியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த பணியின் போது மண்பாண்ட ஓடுகள், எடை கற்கள், தங்க நாணயம், சங்கு வளையல்கள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்பு கூடுகள், உறை கிணறுகள், குழந்தையின் எலும்பு கூடுகள், பல வரிசை கொண்ட செங்கல் சுவர்கள், பெரிய செங்கல் கொண்ட தரைத்தளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கீழடியில் ஏற்கனவே உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பயிற்சி மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தனர். அப்போது முதலில் 25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்றபோது மேலும் கூடுதலாக 13 அடுக்குகள் காணப்பட்டு அத்துடன் சேர்த்து கீழடியில் மொத்தம் 38 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உறை கிணறு பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டதாக தெரிகிறது. இந்த 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய 4 இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று கீழடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்கு கொண்ட பிரமாண்ட உறைகிணற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக அங்கு நூல்களை கட்டியும், பொருட்கள் எவ்வளவு ஆழம் மற்றும் அகலத்தில் கிடைத்துள்ளது என்று கணக்கிட்டு அளவீடு செய்து வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்றது. மேலும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை பணியாளர்கள் மூலம் மண் கொண்டு மூடும் பணியும் தொடங்கி உள்ளது.
Related Tags :
Next Story