பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி மாவட்ட அளவில் வாக்குச்சாவடி மையங்களை மறு சீரமைப்பு செய்வது, தொடர்பான அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு சண்டீஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர்கள், அனைத்து கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல் மற்றும் கூடுதல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டு வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்பட உள்ளது. இதுபோல பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வாக்குச்சாவடி மையம் அமையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பழுதடைந்த வாக்குச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சியினர் இது போன்ற கோரிக்கைகள் இருந்தால் அது குறித்து எழுத்து மூலம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story