ராமேசுவரத்தில் சமூக இடைவெளியின்றி கார் நிறுத்துமிடத்தில் செயல்படும் ஆதார் மையம்


ராமேசுவரத்தில் சமூக இடைவெளியின்றி கார் நிறுத்துமிடத்தில் செயல்படும் ஆதார் மையம்
x
தினத்தந்தி 14 Oct 2020 4:00 PM IST (Updated: 14 Oct 2020 3:40 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் சிறிதாக இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் ஆதார் மையம் செயல்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கும் மற்றும் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு, டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிப்பதற்கு உள்ளிட்ட அரசின் எந்த ஒரு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாகிவிட்டது.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் ஆதார் அட்டை எடுப்பதற்கு என்று தனி கட்டிடம் வசதிகள் கூட இல்லாமல் பல வருடங்களாக தாலுகா அலுவலக வளாகத்தில் கார் நிறுத்தக்கூடிய இடமொன்றில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டமாக யாரும் எங்கும் செல்லக்கூடாது. கூட்டமாக ஒரு இடத்தில் கூட கூடாது என்று அரசின் உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்தில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கவும், விண்ணப்பிப்பதற்கு மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கூட்டமாக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. சிறிய இடமான கார் நிறுத்தும் கட்டிடத்தின் உள் பகுதியில் இந்த ஆதார் மையம் செயல்பட்டு வருவதால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கூட்டமாக நின்று வருகின்றனர்.

கார் நிறுத்தும் இடத்தில் செயல்பட்டு வரும் இந்த ஆதார் மையத்தால் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே ராமேசுவரத்தில் ஆதார் மையத்திற்கு என்று தனி கட்டிடம் ஒன்று விரைந்து கட்டுவதற்கும் அதுவரையிலும் மாற்று கட்டிடத்தில் இந்த ஆதார் மையம் செயல்படுவதற்கும், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ராமேசுவரம் பகுதியில் கூடுதலாக மற்றொரு ஆதார் மையம் திறந்து செயல்படுத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story