3 வீடுகளில் திருட்டு போன ரூ.23 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் மீட்பு - 3 பேர் கைது


3 வீடுகளில் திருட்டு போன ரூ.23 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் மீட்பு - 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2020 4:45 PM IST (Updated: 14 Oct 2020 4:42 PM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதிகளில் 3 வீடுகளில் திருட்டு போன ரூ.23 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை சட்டையப்பர் வீதியை சேர்ந்தவர் சாய்பிரபு. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்களை கடந்த மாதம் 20-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதே நாளில் கீழ்வேளூர் அருகே பொரவாச்சேரியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது வீட்டிலும் 3 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. மேலும் கீழ்வேளூர் அரசானிகுளத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரது வீட்டில் 50 பவுன் நகைகளும், 2 ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடர்ச்சியாக 3 வீடுகளில் திருட்டு போன சம்பவம் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாகை சட்டையப்பர் மேல தெருவை சேர்ந்த மனோஜ் (வயது 31) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் இருந்த போது தன்னுடன் பழக்கமான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் (28) , திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சேர்ந்த வெள்ளப்பாண்டி (29) ஆகிய 2 பேரின் உதவியுடன், 3 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து ராஜசேகர், வெள்ளப்பாண்டி, மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நகை, வெள்ளி, பணத்தை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும். கண்காணிப்பு கேமரா தான் இருக்கிறதே? என அலட்சியமாக இருக்கக்கூடாது என்றார்.

Next Story