வக்கீல் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி 6 மணி நேரம் சாலை மறியல் - கும்பகோணத்தில் பரபரப்பு


வக்கீல் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி 6 மணி நேரம் சாலை மறியல் - கும்பகோணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 5:00 PM IST (Updated: 14 Oct 2020 4:51 PM IST)
t-max-icont-min-icon

அரித்துவாரமங்கலத்தில் வக்கீல் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர் கும்பகோணத்தில் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள அரித்துவாரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது35). வக்கீலான இவர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் ராஜ்குமார் மனைவி சந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலையாளிகளை விரைவில் கைது செய்யக்கோரி கும்பகோணம் அரசு மருத்துவமனை வாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் சுமார் 3½ மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த திருவாரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்பகோணம் பாலகிருஷ்ணன், திருவிடைமருதூர் அசோகன், திருவாரூர் ராஜ்மோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் கும்பகோணம் தாசில்தார் (பொறுப்பு) ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவமனையிலிருந்து நோயாளியுடன் ஒரு ஆம்புலன்ஸ் வெளியே வந்தது. இந்த ஆம்புலன்சை மறித்து வக்கீல் ராஜ்குமார் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு ஓடி வந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களிடமிருந்து அந்த வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென கும்பகோணம் நால்ரோடு பகுதிக்கு வந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் , திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story