கோத்தகிரி அருகே, துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்தி நகை பறிப்பு - 2 பேர் கைது


கோத்தகிரி அருகே, துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்தி நகை பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2020 6:45 PM IST (Updated: 14 Oct 2020 6:31 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள நடுஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுசியா (வயது 23). இவர் நேற்று காலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே இருசக்கர வாகனம் ஓட்டி பழகினார். பின்னர் அவர் காலை 11.30 மணிக்கு தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள பஸ்நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் இருந்தார். அந்த ஆட்டோ பஸ் நிலையம் வந்ததும், ஆட்டோவை ஓட்டி வந்த நபர், அனுசியாவிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் கட்டபெட்டு செல்வதாக கூறியதும், நாங்களும் அங்குதான் செல்கிறோம், வேண்டும் என்றால் ஆட்டோவில் வாருங்கள். கட்டணமாக ரூ.30 மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு பெண் இருப்பதால், அனுசியாவும் சம்மதித்து அந்த ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ பிரதான சாலை வழியாக செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புற சாலையான ரேலியா அணை வழியாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அனுசியா, ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.

அதற்கு ஆட்டோ டிரைவர் எந்த பதிலும் கூறாததால், அனுசியா சத்தம் போட்டு உள்ளார். அதற்கு டிரைவர், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். எனினும் அவர் சத்தம் போட்டதால், டிரைவர் அனுசியாவை துப்பாக்கியால் தாக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணும், டிரைவரும் சேர்ந்து அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

பின்னர் அந்த ஆட்டோ கட்டபெட்டு பஜார் பகுதியில் அனுசியாவை இறக்கிவிடாமல் வெஸ்ட் புரூக் வழியாக கூக்கல் தொரை பகுதிக்கு செல்லும் சாலையில் வேகமாக சென்றது. அங்குள்ள ஒசட்டி முனீஸ்வரர் கோவில் அருகே சென்றதும், ஆட்டோவை நிறுத்தி அனுசியா அணிந்திருந்த 2¼ பவுன் நகையை அவர்கள் பறித்தனர்.

அத்துடன் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மீண்டும் அவரை துப்பாக்கியால் தாக்கியதுடன், கழுத்தை நெரித்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது அந்த வழியாக வந்த கூக்கல் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அவருடன் சென்றவர்கள், அந்த ஆட்டோவை மறித்து அதற்குள் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் அதற்குள் இருந்த பெண், அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு, ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அனுசியாவை மீட்டதுடன், ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த சார்லஸ் (32), மவுண்ட் பிளசன்ட் பகுதியை சேர்ந்த ஆன்டனி குரூஸ் மனைவி அனிஷா (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சார்லஸ் மற்றும் அனிஷா 2 பேரும் சேர்ந்து கிராமங்களுக்கு சென்று டீத்தூள் மற்றும் முட்டைகளை விற்பனை செய்து வருவதும், அனுசியா மட்டும் பஸ்நிலையத்தில் தனியாக நின்றதால், அவரை கடத்தி நகை மற்றும் பணம் பறிக்க நினைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அத்துடன் காயம் அடைந்த அனுசியா சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சார்லஸ் மற்றும் அனிஷா வேறு யாரிடமும் இதுபோன்று நகை பறித்து உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களிடம் இருந்து ஏர்கன் ரக துப்பாக்கி, ஈயக்குண்டுகள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2¼ பவுன் நகையும் மீட்கப்பட்டது. இதற்கிடையே, அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்திய தகவல் அறிந்து கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் பலர் திரண்டு, இளம்பெண்ணை கடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story